நீர் வளம் பெருக்கிடவோ, நிலவளம் செழித்திடவோ, பெருமுயற்சி ஏதும் எடுத்திடாமல், பற்றாக்குறையோடு போராடி வாழப் பழகிவிட்டோம்.
குடிநீர் பற்றாக்குறை அதிர்ச்சி அளிக்காத அன்றாட நடைமுறையாகிவிட்டதல்லாமல், விளைநிலங்களின் பரப்பளவும் பாதியாகக் குறைந்துவிட்டதையும், நீர்நிலைகளின் பராமரிப்பின்மையையும் பெரிய பாதிப்பாகவே உணர்ந்திடாமல், அவ்வப்போது முணுமுணுப்பு, சலசலப்பு, போராட்டம், அவலங்களின் தொடர்ச்சி. இதுதானே நமது இன்றைய நடைமுறை!
ஆனால் மக்கள் தொகை பெருக்கத்தில் முன்னிலை, முதல்நிலை வகிக்கிறோம். 1940ல் 40 கோடி! இன்று 135 கோடி!! மக்கள் தொகைப் பெருக்கம் மனிதவள நலிவு, இரண்டுமே கவலையளிக்கக் கூடியவைகள் தானே? மனிதவளம் அறிவின் பெருக்கமா? ஒழுக்கத்தின் உறுதிப்பாடா? செயல்திறனின் வேகமா? இவைகளின் கலவையா? பொய்யாமொழி மனிதவளத்திற்கு இலக்கணம் சொல்லியிருக்கிறார்.
அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மையொடு ஐந்து சால்பு ஊன்றிய தூண் இவ்வைந்து குணநலன்களின் கலவையால் வடிவமைக்கப்பட்ட உறுதியானத்தூணாக நின்றால் சமுதாயக் கூடத்தில் விருப்பரு சுற்றம் சூழும். அருப்பரு ஆக்கம் மிகும்!
இதுதான் மனிதவளம்! இதன் அருகில் செல்பவர் சிலரே. இவ்வைந்து குணநலன்களையும் அணிந்து வாழ்பவர் அரிதின் அரிதாக அவ்வப்போது தோன்றி நமக்கு நினைவூட்டி மறைகிறார்கள்.
மனவளம் பெருகிட குற்றமிழைக்கும் உணர்வுகளை விலக்கவல்ல, அறன் வலியுறுத்தும் கல்விச்சாலைகள், குற்றங்களைக் களைய வல்ல காவல்துறை, சமன் செய்து சீர்தூக்கும் கோல் போன்ற பண்புடைய சட்ட வல்லுநர்களும் தாமதியாமலும் அவசரப்படாமலும், மக்கள் மனவளத் தெளிவோடு வாழ்வதற்குரிய தீர்ப்புகளை வழங்கிடும் நீதிமன்றங்களும், போராட்டங்களைத் தவிர்க்கத் தெரிந்த அரசும், அரசியல்வாதிகளும் மக்களின் மடமையை ஊக்குவிக்காத ஊடகங்களும்தான் இன்றைய அவசரத் தேவை. இன்று, மனிதவளம் செழிக்கிறதா? சிதைகிறதா? ஒரு கண்ணோட்டம், மனிதவளம் பற்றி சிந்திக்கும்முன் மனிதனைப் பற்றி அறிந்து கொண்டு, அவன் பெற்றுள்ள, பெற வேண்டிய மனவளம் பற்றிச் சிந்திப்போம்.
மனிதர்களாகிய நாம் மனிதர்களைப் பற்றி தெரியாதவர்களாகவே இருக்கிறோம். ஆம்! நம்மில் பெரும்பாலோர்க்கு தங்களைப் பற்றி தெரியவே தெரியாது. தெரிந்து கொள்ளவும் விரும்பமாட்டார்கள். அடுத்தவன் குறைகளை அலசி ஆராய்வார்கள்!
ஊனுடம்பே ஆலயம், உடம்புளே உறுபொருள் கண்டேன். படித்திருப்பார்கள், ஊனுடம்பைப் பாதுகாக்கவும் இல்லை. உறுபொருளைத் தேடவுமில்லை. காலத்தை வீணே கழித்துக் காலமாகிறார்கள்.
மனிதன் படைக்கப்பட்டானா? பரிணமித்தானா? படைக்கப்பட்டான் எனின் எப்போது? ஏன்? படைப்பின் நோக்கம்? அண்மையில், நமது மத்திய அரசின், மனிதவள மேம்பாட்டுத்துறையின் அமைச்சர் மனிதப் படைப்பு பற்றி விளக்கம் கொடுத்துள்ளார். நாமெல்லாம், ரி´ புத்திரர்கள் குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்பதெல்லாம் வெறும் பிதற்றல்கள். இது பத்திரிக்கையில் வந்த செய்தி. இதை முழுக்கப் படித்தபின் எனக்குள் குழப்பம், முதல் குழப்பம், காலக்குழப்பம்.
நம் மூதாதையர் ரி´கள் என்றால் ரி´களின் காலம் இதிகாச காலத்தில் தானே! ரி´கள் பற்றி புராணங்களில் படித்திருக்கிறோம். புராதன கால வரலாற்று ஆய்வாளர்களின் பதிவுப்படி, வேத காலம் 9000 ஆண்டுகட்கு முந்தையது.
இராமாயண காவிய நிகழ்வுகள் சுமார் 7000 ஆண்டுகட்கு முந்தையதாக இருக்கலாம். பாரதப் போரும், கிருஷ்ணருடைய பகவத் கீதையின் காலம் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னர், வேதங்களின் பிறப்பிடம் கங்கை, யமுனை, சிந்து, ஸரஸ்வதி சமவெளிகள், வேதங்களில் இமயத்திற்கு வடக்கேயும், தென்னிந்தியாவில் இருந்த மன்னர்கள் பற்றியோ, நாடு, மக்கள், பற்றியோ எந்தக் குறிப்பும் இல்லை. வேதம் எப்போது தென்னிந்தியா வந்தது? ரி´ புத்திரர்களாகிய நாம், ரி´களின் வம்சாவளியில் வந்த நாம், நற் பண்புகளின் உறைவிடமாக, ஒழுக்கசீலர்களாக, குணக்குன்றுகளாக அல்லவா வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும்!
உலகுக்கே வழிகாட்டிகளாக, உன்னத நிலையில் மட்டுமல்ல, உலகையே ஒரு குடும்பமாக மாற்றியிருக்க வேண்டுமல்லவா? நம்மிடம் புஷ்பக விமானம் இருந்தது. தர்ம சாஸ்திரங்கள் இயற்றினோம். ஆகம விதிகள் வகுத்தோம். 18 உபநித்துக்கள் 18 புராணங்கள், அறுபத்தி நாலு கலைகள், அஸ்திரப் பயிற்சியில் தேர்ச்சி, யோகக்கலையின் கர்த்தாக்களே நாம்தானே! இவ்வளவு இருந்தும் 56 தேசங்களாக பிரிந்து போரிட்டுக் கொண்டிருந்தோமே? முகலாயருக்கு எப்படி அடிமையானோம்? பின்பு ஆங்கிலேயனின் அடிமைகளானோம். நமது ஆற்றல்கள் நற்குணங்கள் சரியாகப் பயன்படுத்தப்படவில்லையோ?
தேவாசுரப் போர்- பாரதப் போரில் துவங்கி ஆங்கிலேயனோடு அஹிம்சைப் போர் வரை நாம் போராட்டத்திலேயே பொழுதைக் கழித்துவிட்டோமோ? இப்போதும் போராட்டங்கள்தான் நமது பிரதானப் பணியாகிவிட்டன.
கிரேக்கர்களும் நம்மைப் போல புராணங்கள் பல படைத்தார்கள். கடவுளர்களை சிலைகளாக வடித்தார்கள் வணங்கினார்கள் அன்று. இன்றும் அங்கே சிலைகள் நிற்கின்றன. சிலைகள் கடத்தப்படுவதில்லை; சிலைகள் உடைக்கப் படுவதுமில்லை; சிலைகள் வணங்கப்படுவதும் இல்லை. நாமோ சிலைகளுக்கு அபிசேகம் பால், தயிர், தேன், சந்தனம், சொர்ணாபிஷேகம் கூடச் செய்கிறோம். சிலைகளைக் கடத்துகிறோம்; சிலைகளை உடைக்கிறோம்.
இச்செய்கைகள் மனவளச் செழிப்பா சிதைவா? அறியாமைச் சக்தியினின்று, வாலறிவை நோக்கி பயணிப்பதுதானே மனிதவள செழிப்பு; ஆனால் நூற்றாண்டுகள் பல புரண்ட பின்னும், நல்ல நூல்கள் இயற்றப்பட்டும், நூற்றுக்கணக்கில் சான்றோர்கள் போதித்தும் இன்னும் அறியாமைச் சேற்றில் அமிழ்ந்து கிடப்பதில் தான் சுகம் காண்கிறோம்!
சிற்றின்பம் வெட்கி அறனல்லவைகளையே செய்கிறோம். மதுரை எரிந்தது, அன்று கண்ணகி எரியூட்டினாள். இலங்கை எரிந்தது, ஹனுமன் எரியூட்டினான். இரண்டிலும் பெண்களின் கற்பு எரியூட்டலுக்குக் காரணமாக அமைந்தது. அண்மையில் டெல்லி எரிந்த, எரிச்சல் இன்னும் அடங்கவே இல்லை. மனிதவளம் செழித்தோங்கி இருக்கவேண்டிய இன்றும் எரியூட்டி உயிர் பறித்து. உடல் சிதைத்து, உடைமைகளை உருக்குலைத்து வெறியாட்டம் போடுகிறோமே! ஏன்? மதம் என் மதம் தான் சிறந்தது எனும் அஞ்ஞானம் அறியாமை.
உலகு ஒரு குடும்பமாக வாழ முயற்சி மேற்கொள்ளல்தான் மனிதவளச் செழிப்பு. மதமிகைப்பற்று தான் வன்முறைகளின் ஊற்றுக்கண் என்று திரும்பத் திரும்ப நிரூபிக்கப்பட்டும் என் மதம் உயர்ந்தது என் கடவுள் சிறந்தவர் என்றே செயல்படுவது மனிதவளச் செழிப்பல்ல. மன்னிக்கவும். மனிதவளச் சிதைவு.
உலக மாந்தரில் மதவாரி மக்கள் தொகை விவரம் பற்றிய ஒரு புள்ளி விவரம் கண்டேன். ரி´ புத்திரர்களாகிய நாம் ஹிந்துக்கள் என்று ஆங்கிலேயனால் பெயர் சூட்டப்பட்ட நாம், நூற்று ஐந்துகோடி, உலக மாந்தரில் பதினைந்து சதவிகிதத்தினர் !
பரமபிதாவால் படைக்கப்பட்ட ஆதாம் ஏவாளை மூதாதையராகக் கொண்ட கிருஸ்துவர்கள் 220 கோடி (30%). அல்லாவால் படைக்கப்பட்ட மனிதர்களை முன்னோராகக் கொண்ட இஸ்லாமியர்கள் 165 கோடி (23.2%). ஜீடோயிசம், சமணம், சீக்கியம் 10 கோடிக்கும் குறைவு. மொத்தம் 50 கோடி (7.5%) மதக்குறியீடே இல்லாதோர், தங்களை படைத்தவர் பற்றியெல்லாம் கவலையில்லா மனிதர்கள் 115 கோடி (16%) இவர்களெல்லாம் மனிதர்கள்தானே! வெவ்வேறு கடவுள்களால் படைக்கப்பட்டார்கள் என்று எப்படி சொல்லமுடிகிறது. சக மனிதனை, மனித நேயத்தோடு அல்லவா பார்க்கவேண்டும். வேறுவிதமாகப் பார்த்திடும் எண்ணம் உள்ளவர்கள் இருக்கிறார்கள் என்பது வியப்பல்ல வேதனை! அறிவுவிருத்தி ஒரு தொடர் முயற்சியாக வாலறிவை நோக்கியப் பயணம் தடைகளை தகர்த்திடும் ஆற்றல் மிக்கதாகவும் முன்னுரிமை கொண்டதாகவும் அமையாத வரை, மடமைகளை, மூடநம்பிக்கைகளை அகற்றவே முடியாது. நம் காலம், வருங்காலத்திற்கு வழங்கவேண்டியது மனிதநேயம் - மனிதவள செழிப்பு மதப்பற்றின்மை !
பழம்பெருமை பேசி, பொழுதைக் கழித்தது போதும். மூடநம்பிக்கைகளில் மூழ்கியிருந்தது முடிந்த கதையாக்கிட முயலுவோம். மனிதனின் அடுத்த நிலைக்கு நகர்ந்திட முனைவோம்.
அடுத்த நிலை ஆம் அடுத்த நிலை தெய்வமாதல். மனிதன் என்பவன் தெய்வமாகலாம் திரைப்படப் பாடல் நினைவில் ஒலிக்கிறதே தவிர, தொடர்ந்து சிந்தனையோட்டம் நிகழ்வது இல்லை.
நல்லன தேர்ந்து, அல்லன நீக்கி, இப்போதைய பழக்கவழக்கங்களை நம்பிக்கைகளைச் சீர்தூக்கி. அவைகளில் நல்லன தேர்ந்து, அல்லன அகற்றி, ஆருயிர்க்கெல்லாம் அன்பு செய்தால், பகையின்றி வாழ்ந்தால், மனிதன் முழுமை அடைவான். தெய்வநிலை எய்துவான்.
சாற்றை நீராக்கி, நீரை நெருப்பாக்கிடும் வல்லமையை நிரூபித்த விஞ்ஞானம் தனது தேடல் பணியைத் தொய்வில்லாமல் தொடர்கிறது.
நாம் வேள்விகளையும், ஹோமங்களையும் தொடர்கிறோம். பதினாறுவகைப் பொருள்களைப் பூரண ஆகுதியா அக்னிதேவனுக்குச் சமர்ப்பித்து பரவச நிலை எய்துகிறோம். இதுமட்டுமல்ல, கடா வெட்டுதல், கோழிகளின் கழுத்தை முறித்து படையலிடுதல் என்ற பெயரில் பக்தியை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறோம். தீ மிதித்து தூய்மைபடுத்திக் கொள்கிறோம். அலகு குத்தி, அந்தரத்தில் தொங்க நேர்த்திக்கடன் செலுத்துகிறோம். பக்தர்களே, மனம், புண்படாமல் தயவு செய்து சிந்தியுங்கள். நிதானமாக இந்த செயல்களைச் சீர்தூக்கிப் பாருங்கள். நதி நீரை தூய்மைப்படுத்த முயற்சி எடுக்காமல் பிரம்மாண்ட பூஜைகள் நடத்துவதால் நதி நீர் தூய்மைப்படுமா?
சுற்றுப்புறத் தூய்மை பற்றியும், நீர் நிலைகளைக் காப்பது பற்றியும் பேசிக் கொள்கிறோம். விழாக்கள்! அதிலே பூஜைகள் பொன்னாடைகள் பூங்கொத்துக்களுக்குக் குறைவே இல்லை கோவிந்தா! புனித நீராடலுக்கு இலட்சக்கணக்கில் கூடி நதிநீரை மேலும் மாசுபடுத்தி மகிழ்கிறோம்! இவை மனிதவளச் செழிப்பா? சிதைவா? மதம் கோலோச்சுகிறது. யுகநாயகர்கள் பிரகாசிக்கிறார்கள். இராமனின் வாலி வதமும், கிருஷ்ணரின் பாரதப் போரும் என் நினைவுக்கு வந்து அச்சுறுத்துகின்றன. யுக தர்மங்கள் கடந்து போனவை. நமது இன்றைய தர்மம் எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பது மட்டுந்தான். அன்பின் வழியது உயிர்நிலை. அதுவே உயர்நிலை.
திருத்தங்கள் தேவைதான், இணக்கத்திற்கும், இணைப்புக்குமான திருத்தங்கள் பிரிவிக்கும், பிரிவினைக்கும் வழிவகுத்திட அல்ல.
அரசோச்ச இத்தனை பேர் ஏன் போட்டியிடுகிறார்கள்? புதுமுகங்கள் புகத் துடிக்கிறார்கள்! தேர்தலை திருவிழாவாக்கிக் கொண்டாடுகிறார்கள். தொண்டர்களை கூத்தாட வைக்கிறார்கள். போர்க்களமும் ஆக்கி வேடிக்கை பார்க்கிறார்கள்! இதுவா மனிதவள செழிப்பு?
மதுவிலக்கு மதுக்கடைகளை குறைத்தோம். மதுவிற்பனை கூடியது! மதுப்பழக்கத்தைக் குறைத்திட என்ன செய்வோம்?? குட்கா, போதை புகையிலைப் பொருட்களைத் தடை செய்தோம். உற்பத்திக் கூடங்களில் சோதனை நடத்தினோம். குட்காவும் போதை வஸ்துகளும், வேண்டியவர்கட்கு வேண்டுமளவுக்கு கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறன. அறிவு விருத்தியா மனவள செழிப்பா? பாலியல் வன்கொடுமை பஞ்சமா பாதகங்களின் ஒருமித்த வெளிப்பாடாகக் கோரத்தாண்டவம் ஆடுகிறதே, எழுதவே என் விரல்களில் நடுக்கம் மனதில் அருவருப்பு அழுகை?? மனித வள செழிப்பை நோக்கியா பயணிக்கிறோம் ! சோலைவனமாகவல்லவா இருக்கிறது என்று சொல்பவர்கள் சிலரல்ல, பலர்! கோள்கள் பற்றிய ஆய்வுகளை உலக விஞ்ஞானிகள் தொடர்கின்றனர். வியத்தகு விவரங்களும் வெளியிடப்படுகின்றன. இவர்கள் ஏன் இவ்வளவு சிரமப்பட வேண்டும்? நமது ஜோதிட வல்லுநர்களுக்கு கோள்களைப் பற்றிய அத்தனை விவரங்களும் தெரிந்திருக்கின்றனவே! நல்ல நேரம், கெட்ட நேரம், வாங்க, விற்க நிமிடக் கணக்கில் பலன் சொல்கிறார்களே! இவர்களை சந்திக்க வரிசையில் நிற்பவர் ஏராளம் என்பது உண்மை. ஆனால் நீங்கிய இடர் பெற்ற பலன் ஏதேனும் பதிவுகள் உள்ளனவா? தன்னம்பிக்கையின்மையின் வெளிப்பாடல்லவா? வேண்டாம் ஜோதிடம். வேண்டியது மனோதிடம்.
மதம் மறைந்து எம்மதமும் சம்மதம் எனும் வள்ளலார் வடிவம் (எளிமை - தூய்மை) வெளிச்சத்திற்கு வந்தால், வரவழைத்திட நாம் உறுதி பூண்டால், மனிதநேயம் மலரும் ! மனிதவளம் செழிக்கும் !
இலட்சுமணசாமி
இராணிபேட்டை
08056438488