பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய சான்றோர்களே, ஆன்மநேய ஒருமைப்பாட்டு உள்ளம் கொண்ட அன்பு சகோதர, சகோதரிகளே...
தயா உள்ளத்தோடு தீபம் அறக்கட்டளையின் பல்வேறு ஆன்மநேய அறப்பணிகளுக்கு வாரி வழங்கும் கொடை வள்ளல்களுக்கு தீபம் அறக்கட்டளையின் பணிவான வந்தனங்கள் பல....
உலகெலாம் போற்ற ஒளிவடிவனாகி, இலக அருள் செய்து இசைந்து வரும் கற்பனை கடந்த ஜோதி, கருணையே உருவமாகி, அற்புதக் கோலம் கொண்டு ஜோதியுள் சுடராய், ஜோதிப் பிழம்பதோர் மேனியாகி இருக்கின்ற எம்பெருமான், தில்லையிலே ஆடும் தாண்டவத்தை மனித உள்ளத்திலே ஆட வைத்தவரும், மாக்களை மக்களாக்கியும், தீராத வினைகளை தீர்த்தும், மாறாத பிணிகளைப் போக்கியும், பசியால் வாடும் வறியவர்களின் பசிப்பிணியை போக்க 1867-ம் ஆண்டு வைகாசி திங்கள் 11-ம் நாள் உத்தரஞானசிதம்பரம் எனும் வடலூரில் தனது திருக்கரங்களால் அக்னி ஏற்றி அணையா அடுப்பை உருவாக்கி சத்திய தருமச்சாலையை நிறுவியவரும், உலகினில் உயிர்களுக்கு உறும் இடையூறுகளை நீக்கும் பொருட்டு 1872-ம் ஆண்டு வடலூரில் சத்திய ஞானசபையை நிறுவி, சாதி, மத, இன வேறுபாடின்றி அனைவருக்கும் மெய்ஞானத்தை போதித்து மரணமில்லா பெருவாழ்விற்கு வித்திட்டவரும், ஆதியும், அந்தமும் இல்லா, பாதியும், முடிவும் காணா அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தனிப்பெருங் செங்கோல் ஆட்சி நடத்தும் இறைவர், உத்தரஞானசிதம்பரந்தன்னில் ஆடலரசனாய், அம்பலவாணனாய் அருளாட்சி புரிந்து வருகின்ற திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் பேரருட் பெருங்கருணையோடு 1997-ம் ஆண்டு சிறுசிறு சேவையாக தொடங்கி 2007-ம் ஆண்டு ஜீலை திங்கள் முதல் ஓர் அரசு பதிவு பெற்ற அறநிறுவனமாக தீபம் அறக்கட்டளை ( அரசு பதிவு எண்: 2035/2007) உருப்பெற்று தமிழகம் முழுவதும் 20 தருமச்சாலைகள் தொடங்கப்பட்டு தினசரி ஆயிரக்கணக்கானோருக்கு மூலிகை அன்னக்கஞ்சி வழங்கியும், வேளச்சேரியில் நித்ய தீப தருமச்சாலை மற்றும் நடமாடும் நித்ய தீப அன்ன தருமச்சாலை வாகனத்தின் மூலமாக பசியினால் வாடும் பல நூற்றுக்கணக்கான வறியவர்களின் வயிற்றுப்பிணியாகிய பசிப்பிணியை போக்கியும், மேலும் படிப்பில் நன்றாக தேர்ச்சி பெற்று, மேற்படிப்பு தொடர முடியாமல் தவிக்கின்ற கிராமப்புற ஏழை எளிய மாணவர்களின் எதிர்கால வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டுவருடந்தோறும் 100 ஏழை எளிய மாணவர்களின் மேற்படிப்பிற்கான கல்வி உதவித் தொகை வழங்கியும், நோயினால் வருந்துகின்ற சமுசாரிகளுக்கு மருத்துவ உதவியும், பார்வையற்ற மற்றும் மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்கு மாதந்தோறும் அரிசி & மளிகை பொருட்கள் வழங்கியும், ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர் காப்பகங்களுக்கு சென்று அன்னம்பாலித்து ஆடிப்பாடி மகிழ்வித்தும், மார்கழி மாதம் சென்னை மாநகரை சுற்றி சாலையோரங்களில் குளிரால் நடுங்கிக் கொண்டிருக்கும் வறியவர்களுக்கு கம்பளிப்போர்வை வழங்குதல் போன்ற மனிதநேயமிக்க சமுதாய நலப்பணிகளை செய்து வருவது யாவரும் அறிந்ததே...!
|
No comments:
Post a Comment